ராமநாதபுரம்: 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கரோனா தடுப்பூசி போடும் பணியில் சிறப்பு முகாமில் ஏராளமானோர் குவிந்தனர்.
கரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிற நிலையில், கரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கு ஒரே வழி, அதற்கான தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கெனவே 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசியை 95 ஆயிரத்து 301 பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.
தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசியைப் போடுவதற்கான சிறப்பு ஒதுக்கீடு தடுப்பூசி மருந்துகள் கொண்டுவரப்பட்டுள்ளன. கோவேக்ஸின் 610 குப்பிகளும், கோவிஷீல்டு 8,910 குப்பிகளும் இருப்பில் உள்ளன.
இந்த நிலையில் ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் பகுதியிலுள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போடுவதற்காக குவிந்தனர். இவர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.