உலகம் முழுவதும் கரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. தொடர் பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு, சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மத்திய அரசு ஜூன் 8ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி அளித்தது. இதுதொடர்பாக அந்தந்த மாநில அரசுகளே முடிவுசெய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. இதனால் கோயில்களைத் திறப்பதற்குத் தடை தொடருகிறது. அந்த வகையில், ராமேஸ்வரத்திலுள்ள ராமநாத சுவாமி கோயிலிலும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 75 நாள்களுக்கு மேலாக இக்கோயில் நடைதிறக்கப்படாத நிலையில், கோயிலைத் திறக்கக்கோரி இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அக்கட்சியின் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில், மேற்கு கோபுர வாசல் பகுதியில், சாலைகளில் மஞ்சள் தண்ணீர் தெளித்து, வேப்பிலை போட்டு, அதன் மீது அங்கபிரதட்சணம் செய்து கோயிலைத் திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அசாம்பவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில் முன்பு காவல் துறையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவிலிருந்து மீண்ட காவல் ஆய்வாளருக்குத் துணை ஆணையர் உற்சாக வரவேற்பு!