ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே உள்ள எட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரின் மனைவி தெய்வானை (52). இவர் நேற்று முன்தினம் மதியம் எட்டிவயலில் உள்ள தனது வயலுக்கு விவசாய பணிக்குச் சென்றுள்ளார். இரவாகியும் வீட்டிற்கு திரும்பாததால் குடும்பத்தினர் தேடிவிட்டு, உறவினர் வீட்டிற்குச் சென்றிருக்கலாம் என்று எண்ணி இருந்துள்ளனர்.
இந்நிலையில், குடும்பத்தினர் நேற்று காலை வயலுக்குச் சென்று பார்த்தபோது, தெய்வானையின் செருப்பு மட்டும் வயலில் கிடந்துள்ளது. அதனையடுத்து அப்பகுதியில் தேடியபோது, வயலில் இருந்து சிறிது தூரத்தில், தெய்வாணை இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரது உடலில் மீது கீறல்கள், காயங்களும், ஆடைகள் கிழிந்த நிலையிலும் இருந்ததுள்ளது. மேலும் அவர் அணிந்திருந்த தங்கச் சங்கலி, தோடு உள்ளிட்ட நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சத்திரக்குடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவலர்கள் உடலைக் கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். நேற்று காலை சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண் குமார் சென்று விசாரணை செய்தார்.
இறந்த தெய்வானைக்கு வினோத் காம்ப்ளி, இளையராஜா, வெற்றி மாறன் என 3 மகன்கள், சித்ரா என்ற மகளும் உள்ளனர். இதில் வினோத் காம்ப்ளி, ஏர்வாடி போலீஸில் தனிப்பிரிவு தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். வயலுக்கு விவசாயப் பணிக்குச் சென்ற பெண்மணியை நகைக்காக கொலை செய்திருப்பது, அக்கிராம பெண்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.