ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் போதை பொருள் கடத்தல், சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்த காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்டம் முழுவதுமுள்ள ஏழு உட்கோட்டங்களிலும் உள்ள காவல்துறையினர் தீவிர சோதனையில்
ஈடுபட்டனர்.
அதில், தங்கச்சிமடம் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட மெய்யம்புளி கிராமத்தில் விக்கி என்பவரின் தென்னந்தோப்பில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 500 கிலோ சமையல் மஞ்சள் கைப்பற்றப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், முதுகுளத்தூர் பகுதியில் 200 கிலோ குட்காவை கைப்பற்றிய காவல்துறையினர், அது தொடர்பாக முருகன், ஜெயராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கார், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், கேணிக்கரை காவல் நிலைய சரகம், கேணிக்கரை சந்திப்பு அருகில் தடை செய்யப்பட்ட 50 கிலோ குட்கா பாக்கெட்களை கடத்தி வந்த பாசித்ராஜா மீது வழக்குப் பதிவு செய்தனர். ராமேஸ்வரம் துறைமுக காவல் நிலைய சரகம், விட்டில் பிள்ளை முடுக்கு தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனது வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில் 286 மதுபாட்டில்கள், 62 பீர்பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், அதை கள்ளச் சந்தையில் விற்பதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து,
மதுபாட்டில்களை கைப்பற்றிய காவல்துறையினர், அவற்றை பதுக்கி வைத்திருந்த மாரிமுத்துவை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து பாம்பன் காவல் நிலைய சரகம், சின்னப்பாலம் பகுதியைச் சேர்ந்த ரீகன் என்பவர் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது 990 மதுபாட்டில்களும், 36 பீர்பாட்டில்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனிடையே, பொதுமக்கள் தங்களது பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள், மணல் கடத்தல், போதைப்பொருள்கள் விற்பனை, சூதாட்டம், லாட்டரி விற்பனை புகார்கள் இருந்தால், ஹலோ போலீஸ் 8300031100 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை 8778247265, 8778247265, 8778247265 ஆகிய எண்ணிலும் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.