ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் பழனி. இவர் கடந்த 22 வருடமாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். பழனி - வானதி தேவி தம்பதிக்கு பிரசன்னா என்ற 10 வயது மகனும் திவ்யா என்ற 8 வயது மகளும் உள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் ராமநாதபுரம் அருகே உள்ள கலுவூரணியில் தான் கட்டும் புதிதாக கட்டும் வீட்டின் தொடக்க விழாவிற்கு பழனி கடைசியாக வந்து சென்றுள்ளார். இந்நிலையில் சீனாவுடன் எல்லைப் பிரச்னை தொடங்கியதும் லடாக் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் பழனி ஈடுபட்டு வந்துள்ளார்.
தற்போதைய சூழலில் புது வீட்டின் பால்காய்ச்சும் நிகழ்ச்சியில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை எனவும் விழாவை நீங்களே முன்னின்று நடத்திவிடுங்கள் எனக் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார் பழனி. சீனாவுடன் சுமுகப் பேச்சுவார்த்தை தொடங்கியதும் ராணுவத்தை திரும்பப்பெறும் சூழல் உருவானது.
இதையடுத்து, மூன்று தினங்களுக்கு முன் வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பழனி, மனைவியிடம் பேசும் போது சீனாவுடனான பிரச்னை குறையத் தொடங்கியுள்ளதால் யாரும் பயப்படவேண்டாம் என்றும், விரைவில் ஊருக்கு வந்து விடுவேன் எனவும் மனைவிடம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், லடாக் பகுதியில் சீனாவுடன் நடைபெற்ற சண்டையில் பழனி உட்பட மூன்று இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக இந்திய ராணுவம் இன்று காலை தெரிவித்தது.
இதுகுறித்த தகவல் வெளியானதும் பழனியின் குடும்பத்திரனர் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர். சொந்த வீடு கட்டி அதில் இருக்க வேண்டும் என்ற பழனியின் ஆசை கடைசிவரை நிறைவேறவில்லையே என அவரது மனைவி கண்ணீர் மல்க கதறிவருகிறார்.
பழனியின் சகோதரர் தமிழ்க்கனியும் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். பழனியின் உடல் சொந்த ஊரான கடுக்கலூருக்கு கொண்டு வரப்பட்டு நாளை அல்லது மறுநாள் நல்லடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: வந்தே பாரத்: கெய்ரோவிலிருந்து தாயகம் புறப்பட்ட 235 இந்தியர்கள்