ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பல்வேறு வகையான அரிய உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் கடலை தூய்மைப்படுத்தும் கடல் காவலனான சித்தாமைகள் முதன்மையானது. இவை தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரையிலான கடற்கரைப் பகுதிகளில் நவம்பர் மாதத்திலிருந்து முட்டையிடத் தொடங்கும்.
அதிகாலையில் கரையில் ஒதுங்கும் இந்த ஆமைகள், கடற்கரையில் முட்டையிட்டு மீண்டும் கடலுக்குச் செல்லும். அந்த முட்டைகளை வனத்துறையினர் பாதுகாப்பாக எடுத்து பொரிப்பகத்தில் வைத்து, குஞ்சுப் பொரித்த பின்னர் அதனை மீண்டும் கடலில் விடுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று (மார்ச் 3) வரை 70 கூட்டிலிருந்து 8 ஆயிரத்து 400 முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இன்று (மார்ச் 4) ஒரே நாளில் 13 கூட்டிலிருந்து ஆயிரத்து 533 முட்டைகளை சேகரித்துள்ளனர்.
இதுவே இந்த ஆண்டில் ஒரே நாளில் சேகரிக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான முட்டை என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மொத்தமாக இதுவரை 9 ஆயிரத்து 747 முட்டைகளை சேகரித்துள்ளனர்.
இதையும் படிங்க:தனுஷ்கோடி கடல் பகுதியில் 8400 சித்தாமை முட்டைகள் சேகரிப்பு!