ராமநாதபுரம் மாவட்டம் சித்தாமை முட்டையிட உகந்த வாழ்விடமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை, தமிழ்நாடு வனத்துறை ராமநாதபுரம் வன உயிரின கோட்ட அலுவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், தன்னார்வலர்கள் இணைந்து ஆமை முட்டை சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுரோடு முதல் அரிச்சல் முனைவரை உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து ஆமை முட்டைகள் சேகரிக்கப்படுகின்றன. பின்னர் சேகரிக்கப்பட்ட முட்டைகள் எம்.ஆர் சத்திரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வனத்துறையால் அமைக்கப்பட்ட கடல் ஆமை முட்டை குஞ்சு பொரிப்பகத்தில் 50 முதல் 55 நாட்கள்வரை பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. முட்டை பொரிந்த பின்னர் அவை கடலில் விடப்படும்.
கடந்த பத்து வருடங்களாக ஒரு வருடத்தில் சராசரியாக 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலான ஆமை முட்டைகள் மட்டுமே சேகரிக்கப்படும். சென்ற ஆண்டு கடல் சீதோசன நிலை காரணமாக 6 ஆயிரத்து 500 முட்டைகள் மட்டுமே சேகரிக்கப்பட்டது. அவற்றில் 6 ஆயிரத்து 300 ஆமைக் குஞ்சுகள் மட்டுமே கடலில் விடப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு தனுஷ்கோடி, அரிச்சல்முனை கடலோரப் பகுதிகளில் ஆமைகள் முட்டையிடுவதற்கான தகுந்த சீதோசன நிலை நிலவியது.
அதனால் இந்த ஆண்டு 19 ஆயிரத்து 748 ஆமை முட்டைகள் வனத்துறையினரால் சேகரிக்கப்பட்டது. அவற்றில், 19 ஆயிரத்து 200 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. சராசரியாக 97 விழுக்காடு ஆமை குஞ்சுகள் கடலில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரம் வன உயிரின கோட்டம் வரலாற்றிலேயே, இந்த ஆண்டு (2020-2021) மட்டும்தான், கடல் ஆமை முட்டை சேகரிப்பில் புதிய உச்சம் தொட்டிருக்கிறது.
இதுகுறித்து மண்டபம் வனச்சரக அலுவலர் வெங்கடேசன் கூறுகையில், “கடந்த ஆண்டு மிக குறைந்த பட்சமாக 6 ஆயிரத்து 500 முட்டைகள் மட்டுமே எடுக்கப்பட்டன. அப்போது கடல் பகுதியில் ஏற்பட்ட புயல், தட்பவெப்ப சூழல் உகந்ததாக இல்லாததே அதற்கு காரணம். ஆனால், இந்த ஆண்டு ஆமைகளுக்கு ஏற்றவாறு கடலின் நீரோட்டம் அமைந்ததால், அதிகளவிலான முட்டைகள் சேமிக்கப்பட்டன. மேலும் மீனவர்களுக்கு ஆமை முட்டை சேகரிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மீனவர்களும் வனத்துறையினருடன் இணைந்து செயல்பட்டதே முட்டை சேகரிப்பில் புதிய உச்சம் தொடக் காரணம்” என்றார்.
இதையும் படிங்க : துர்நாற்றத்தில் தத்தளிக்கும் கங்கை!