ராமநாதபுரம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் தனியார் மருத்துவ ஆய்வக பரிசோதகராக உள்ளார். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இவர்களது மூத்த மகன் ஜெப்ரிரோஹித் (5), அதே பகுதியைச் சேர்ந்த மணீஷ்குமார் (10) உள்ளிட்ட சிறுவர்கள் சிலருடன் நேற்று மாலை எம்.எஸ்.கே.நகர் தேவாலயம் அருகேயுள்ள ஒரு வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, அப்பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு பூசாமல் இருந்த சுவர், திடீரென இடிந்து விழுந்தது. அந்த இடிபாடுகளில் சிறுவர்கள் ஜெப்ரிரோஹித், மணீஷ்குமார், அப்பகுதியை சேர்ந்த பிரிசில்லா (31) என்ற பெண் ஆகியோர் சிக்கி பலத்த காயமடைந்தனர். இவர்களை அப்பகுதியினர் மீட்டு ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்குச் அனுமதித்தனர்.
மருத்துவமனையில், ஜெப்ரிரோஹித்தை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். விபத்தில் கால், தலையில் பலத்த காயமடைந்த மணீஷ்குமார், பிரிசில்லா ஆகியோர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து ராமநாதபுரம் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், மழை காராணமாக சுவர் நனைந்து இடிந்து விழுந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. உயிரிழந்த சிறுவன் ஜெப்ரிரோஹித் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்துவந்தான்.
இதையும் படிங்க : 'பழக்கடைகளை சேதப்படுத்திய ஆணையர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?' - மனித உரிமை ஆணையம்