ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று கூறி, மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.
பாம்பன் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாகவும், கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், கடந்த இரு நாட்களாக மீன்வளத்துறை மீனவர்களுக்குக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல அனுமதிச் சீட்டு வழங்கவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் பாம்பன் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து, மீனவர்கள் கூறும்போது, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்பவர்களைத் தடுப்பது, எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு நாள் மீன் பிடிக்கச் சென்று கரை திரும்பும் எங்களுக்கும் தடை விதிப்பது வேதனை அளிப்பதாக உள்ளது என வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.