ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பாக கடல் தொழிலாளர் சங்கம் மற்றும் அனைத்து நாட்டுப் படகுகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் கருணா மூர்த்தி தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு அரசானது விசைப் படகுகளை மூன்று கடல் மைல் தொலைவுக்கு அப்பால் மீன்பிடிப்பில் ஈடுபடவேண்டும் என்பதை மாற்றி, 5 கடல் மைல் தொலைவாக விரிவுபடுத்திருப்பதுடன், அதனை உடனடியாக அமல்படுத்தவும், விசைப்படகுகள் இரட்டை மடி வலை மீன்பிடிப்பில் ஈடுபட ஆண்டுதோறும் நடைபெறும் முறைகேடான வசூல் நடவடிக்கை குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
அதேசமயம் கடந்த மாதம் ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குநரிடம் மீன்பிடி தொழிற் சங்கம், நாட்டுப்படகு மற்றும் சிறுதொழில் மீனவர்கள் சார்பில் மனு கொடுத்த பிறகும் மண்டபம் விசைப்படகுகள் ஓலைக்குடா, சங்குமால், கரையூர், சேராங்கோட்டை, முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி உள்ளிட்ட கடல் பகுதியில் கரையோரத்தில் மீன்பிடிப்பில் ஈடுபடுவதை கண்டிக்காதது ஏன் என்பது போன்ற பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஏராளமான மீனவர்கள் மற்றும் தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு, கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை பல்வேறு வகையில் போராட்டம் தொடருமென மீனவ சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.