ராமநாதபுரம் மாவட்டம் சுந்தரமுடையான் சீனியப்பா தர்கா தெற்கு கடற்கரை மன்னார் வளைகுடா பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மீன்பிடித் தொழில் செய்துவருகின்றனர்.
இந்த இடம் 2017-18ஆம் ஆண்டின் காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் சவுக்கு மரக்கன்றுகள் நடப்பட்டு புறம்போக்கு இடமாக இருந்தது. இந்நிலையில் திடீரென்று தனிநபர் ஒருவர் அந்த இடத்தை வாங்கிவிட்டதாகக் கூறி உரிமை கொண்டாடி கடற்கரை வரையிலான பகுதியில் வேலி அமைத்து மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என்று அவர்களைத் தடுத்துநிறுத்தி வருவதாகவும் ஆண்டாண்டு காலமாக மீன்பிடித்து வரும் தங்களின் வாழ்வைக் காப்பாற்ற வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சியரிடம் அக்கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மனு அளித்தனர்.
அதில், அந்த இடம் தனியாருக்குச் சொந்தமானதாக இருக்க முடியாது என்றும் கடற்கரையிலிருந்து 800 மீட்டருக்குட்பட்ட கடல்பகுதி யாரும் வாங்க முடியாது என்று சட்டம் இருக்கும் நிலையில் எப்படி அப்பகுதியை வாங்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த இடத்தை அரசு உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்கள் சென்றுவர வழிவகை செய்ய வேண்டும் எனவும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நாகை, காரைக்கால் மீனவர்களால் தஞ்சை மீனவர்களுக்குக் கடும் பாதிப்பு