ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 194 பேர் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 93 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 100 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். ஒருவர் கரோனாவால் உயிரிழந்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை ராமநாதபுரத்தில் கரோனாவால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதை ஏன் அரசு தினசரி மருத்துவ புல்லட்டில் சேர்க்கவில்லை எனப் பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.இந்நிலையில் நேற்று ராமநாதபுரம்
பாரதியார் தெருவைச் சேர்ந்த 65 வயது பெண் மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாக அரசு தலைமை மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அனுமதிக்கப்பட்ட அரை மணி நேரத்தில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. இதில் அந்தப் பெண்ணுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற கிளை நோய்கள் அவருக்கு இல்லாமல் கரோனாவால் உயிரிழந்திருப்பது ராமநாதபுரம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், அவரின் உடல் இந்திய மருத்துவக் கழகம் பரிந்துரை செய்த வழிகாட்டுதலின்படி அடக்கம் செய்யப்பட உள்ளது.