ராமநாதபுரம்: மதுரை ரயில்வே கோட்டத்தில் அனைத்து பாதைகளும் மின்மயமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ.158 கோடியில் பணிகள் நடைபெறுகின்றன.
மதுரை- திருச்சியிலிருந்து மானாமதுரை வரையிலும் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், மானாமதுரை முதல் பரமக்குடி வரையிலும் மின்மயமாக்கலுக்கான கம்பம் நடும் பணிகள் தற்போது நடந்துவருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் நகா் பகுதியில், ரயில் நிலையத்துக்குள் இரு நடைமேடைகளிலும் 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
நவம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும்
மேலும் மின்கம்பங்கள் அமைப்பதற்கான இரும்புக் கோபுரங்கள் அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. அத்துடன் அதிர்வுகளை தாங்கும் வகையில் புதிய தண்டவாளங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
மின்மயமாக்கலின் ஒரு பகுதியாக ரயில் நிலைய முகப்பு பகுதியில் அளவீடு பணிகள் நேற்று (ஆக. 12) நடைபெற்றன. ராமநாதபுரம் முதல் பாம்பன் வரையில் முதல்கட்ட மின்மயமாக்கல் பணிகள் வரும் நவம்பருக்குள் முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மண்டபம் முதல் ராமேஸ்வரம் வரையில் புதிய பாம்பன் ரயில்பாலப் பணி முடிந்ததும், இப்பணி தொடங்கப்படும் எனவும் ரயில்வே அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும் - ஆசிரியர்கள் கோரிக்கை