ராமநாதபுரம்: திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தினைக்குளம், களிமண்குண்டு ஆகிய ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, நேரில் சென்று தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட கரோனா நிதி உதவி தொகுப்பு மூலம் நிதி
பெற்ற பனை ஓலை உற்பத்தியாளர் தொழில் குழு, தென்னை உற்பத்தியாளர் குழு, தனிநபர் தொழில் கடன் பெற்ற பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.
தென்னை உற்பத்தியாளர் குழு:
தினைக்குளம் ஊராட்சியில் உள்ள களிமண்குண்டு தென்னை உற்பத்தியாளர் குழுவிற்குத் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் ரூ. 1.5 லட்சம் கரோனா சிறப்பு நிதி வழங்கப்பட்டது. இக்குழு மூலம் எண்ணெய் உற்பத்தி, சிறுதொழில் நிறுவனமாக நடத்தப்பட்டுவருகிறது.
மாவட்ட ஆட்சியர் இந்நிறுவனத்தைப் பார்வையிட்டு எண்ணெய் உற்பத்தி மற்றும் நிறுவன செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தார். மேலும் இந்த உற்பத்தி குழுவினால் உற்பத்தி செய்யப்படும் எண்ணெயினை பிராண்டு பெயர் வைத்து சந்தைப்படுத்தலை அதிகரிக்க அறிவுரை வழங்கினார்.
பனை ஓலை உற்பத்தியாளர் தொழில் குழு:
தொடர்ந்து, தினைக்குளம் ஊராட்சி சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற பனை ஓலை கைவினைப் பொருள்கள் தொழில் குழு உறுப்பினர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார். இந்த ஊராட்சியில் உள்ள தொழில் குழுக்களுக்கு தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் ரூ. 3.0 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் செயல்பாடுகளையும், பனை ஓலை கைவினைப்பொருள்களின் விற்பனை, உற்பத்தி செலவினங்களையும் கேட்டறிந்தார். மேலும், பனை ஓலை, கைவினைப் பொருள்கள் தயாரிக்கவும், பாதுகாப்பாக வைப்பதற்கும் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் கரோனா சிறப்பு நிதி:
அதன்பின்பு, களிமண்குண்டு ஊராட்சியில் உள்ள கலையரங்கத்தில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், ஆகியவற்றிற்கு தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் கரோனா சிறப்பு நிதி ரூ. 5.25 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கான தொழில் நடவடிக்கைகள் சம்பந்தமாகத் தொழில் குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், சுயஉதவிக்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.
இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் தெய்வேந்திரன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாசன், உதவி திட்ட மேலாளர், சின்னத்துரை, திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் இராஜேந்திரன், கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
அதனையடுத்து ராமநாதபுரம் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் கரோனா இரண்டாம் தவணை ரூ. 2,000 நிதி உதவி, நிவாரணப் பொருள்கள் வழங்கப்படுவதை ஆய்வுமேற்கொண்டார்.
இதையும் படிங்க: மதன் தான் எங்களுக்கு மோட்டிவேஷன் - திரண்ட இளைஞர் பட்டாளம்