ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரத்தில் கனமழை பெய்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாகத் தொடர்ந்து டெங்குகாய்ச்சல் அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் டெங்கு நோய் சிகிச்சைக்கு எனத் தனிச் சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு டெங்கு வார்டில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில், 6 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 பேருக்கு டெஸ்ட் எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பலர் தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த 16 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் கழிவு நீர் மழை நீரோடு சேர்ந்து பெரும் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருவதால் கொசுத் தொல்லை அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு வார்டு பகுதியில் உள்ள 6 கழிவறைகளிலும் கதவுகள் இல்லாததால் பெண்கள், ஆண்கள் நோயாளிகள் கழிவறைக்குச் செல்வதற்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நோயாளிகள் மிகவும் வேதனை அடைந்து வருகின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் டெங்கு வார்டில் உள்ள கழிவறைகளுக்கு உடனடியாக கதவுகள் பொருத்தப்பட வேண்டுமென நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்குகாய்ச்சல் பாதிப்பு பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
இதையும் படிங்க: கனமழை எச்சரிக்கை; 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம்!