ராமநாதபுரம்: அழகன்குளம் தொல்லியல் களம், வைகை ஆற்றின் கரையில், வங்காள விரிகுடா கடற்கரையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
அழகன்குளம் கிராமத்தில் 1980களில் முதன் முறையாக சிறிதளவில் அகழ்வாய்வு செய்ததில், இவ்விடத்தில் தொல்லியல் எச்சங்கள் இருப்பதை உறுதி செய்தனர்.
இங்குள்ள கிழக்கு கடற்கரைப் பகுதி ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வைகை ஆற்றங்கரையில் உள்ள இவ்வூர் கடற்கரையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
அழகன்குளம் அகழாய்வு
இங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் தமிழ் பிராமி பொறிக்கப்பட்ட சிவப்பு நிற பானை ஓடுகளுடன் மத்திய தரைக்கடல் பகுதியைச் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட ரௌலட்டட் மற்றும் ஆம்போரா பானை ஓடுகளும் கிடைக்கப் பெற்றன.
தமிழ் பிராமி பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கி.பி. 100 காலத்தைச் சார்ந்ததாகும். மேலும், துளையுடன் கூடிய ஓடுகள், செங்கற்கள், மணிகள் மற்றும் மூன்று ரோமானியக் காசுகள் அகழாய்வில் சேகரிக்கப்பட்டுள்ளன.
ஆழ்கடல் ஆய்வு
இந்த நிலையில், அழகன்குளம் பகுதியில் ஆழ்கடல் ஆய்வு நடத்தப்படும் என இன்று நடைபெற்ற பட்ஜெட் உரையில் நிதித்துறை அமைச்சர் அறிவித்துள்ளது இப்பகுதி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
சங்கக் காலத்தில் கொற்கை மற்றும் அழகன்குளம் பகுதியில் துறைமுகம் இருந்ததாக இலக்கியங்கள் மூலம் அறியப் பெறுகிறோம். அதன் அடிப்படையிலும் இதற்கு முன்னால் அழகன்குளத்தில் நடைபெற்ற அகழாய்வில் கிடைக்கப்பெற்ற சங்ககால பொருள்களை அடிப்படையாகக்கொண்டு அழகன்குளத்தில் உள்ள கடல் பகுதியில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்வதற்காக தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறது.
கடல் வழி வணிகம்
அவ்வாறு ஆழ்கடலில் அகழ்வாய்வு செய்யும் பட்சத்தில், துறைமுகம் இருந்ததற்கான சாத்தியக்கூறுகளும், பொருள்களும் கண்டெடுக்கப்படும் நிலையில் இலங்கை, ஐரோப்பா போன்ற பகுதிகளில் கடல் வழியாக வணிகம் செய்யப்பட்டதற்கான சான்றுகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமுள்ளன என அழகன்குளம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.