ராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு முகாம் அமைத்து பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகின்றது. தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக, தற்போது குறைந்த எண்ணிக்கையிலான கோவிஷீல்டு தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட்டுவருகிறது.
குறிப்பாக முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது தவணை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சுகாதாரத் துறையினர் நேரடியாகச் சென்று தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாகவும் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதுவரை 10 விழுக்காட்டினருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.
எனவே தேவையான தடுப்பூசியை ஒன்றிய அரசிடமிருந்து பெற்று, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கைவைத்துள்ளனர்.
தற்போது ராமநாதபுரத்தில் 610 கோவாக்சின், 1610 கோவிஷீல்டு தடுப்பூசி குப்பிகள் கையிருப்பு உள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். நாளைமுதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடையின்றி தடுப்பூசி செலுத்தப்படும் எனச் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்திருக்கும் நிலையில், அது சாத்தியமில்லை என்றே கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விமானம் மூலம் சென்னை வந்த 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள்!