ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை கிராமத்தில் ரயில்வே துறைக்குச் சொந்தமாக பழைய கட்டடத்திற்குள் நாட்டு வெடிகுண்டு இருப்பதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு சென்ற காவல் துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் பரமரிப்பின்றி இருந்த கட்டடத்தைச் சோதனையிட்டு நாட்டு வெடிகுண்டை கண்டெடுத்தனர்.
கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை காவல் துறையினர் ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் மணல் மூட்டைகளுக்கிடையே பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்நிலையில், கேணிக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இது குறித்து மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது,
"வாலந்தரவை கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையேயுள்ள முன்விரோதம் காரணமாக கடந்தாண்டு இருவர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட தரப்பினர் அவர்களை குறிவைத்து நாட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து வாலந்தரவை அருகே உள்ள ரயில்வேக்குச் சொந்தமான பழைய கட்டடத்தில் காவல் துறையினர் சோதனை நடத்தியதில் ஒரு நாட்டு வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது.
அதை பாதுகாப்பாக எடுத்து ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் வைத்துள்ளனர். இந்த நாட்டு வெடிகுண்டை தடயவியல் நிபுணர் கொண்டும் மதுரையிலிருந்து வரும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு நிபுணர்கள் கொண்டும் செயலிழக்கச் செய்யப்படும்.
துணை கண்காணிப்பாளர் தலைமையில் மூன்று காவல் துறை ஆய்வாளர்கள் கொண்ட மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு 50 காவலர்கள் வாலந்தரவை முழுவதும் வீடு வீடாகச் சென்று சோதனை நடத்தினர். மேலும், இரண்டு நாள்கள் 50 காவலர்கள் இக்கிராமத்தின் நான்கு பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த எட்டு பேரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகிறோம்" என்று தெரிவித்தார்.