ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு படகில் கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக கடலோரப் பாதுகாப்பு குழும காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்து. இதனையடுத்து தேவிப்பட்டினம் கடல் பகுதியில் சார்பு ஆய்வாளர்கள் கணேஷமூர்த்தி, சுகுமார் தலைமையில் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
திருப்பாலைக்குடி தெற்கு கடற்கரை அருகே நின்றுகொண்டிருந்த திருப்பாலைகுடி கிழக்கு கடற்கரைத் தெருவைச் சேர்ந்த அமீர் சேக் அப்துல்லா (26), முகமது அசாருதீன் (20) ஆகியோரைப் பிடித்து விசாரித்ததில் பதிவெண் இல்லாத பைபர் வல்லத்தில் 200 கிலோ பச்சை கடல் அட்டைகளை வைத்திருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரை கைதுசெய்த காவல் துறையினர், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், 200 கிலோ பச்சை கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்தவிருந்தது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பச்சை கடல் அட்டைகளின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மண்டபம் கடற்கரையில் உயிருடன் கரையொதுங்கிய பெருந்தலை ஆமை