18 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில், நேற்று முன்தினம் (மே.22) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தடுப்பூசி போடும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
முன்பதிவு, முன்னுரிமை அடிப்படையில் இந்தத் தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 3 கோடியே 60 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், தற்போது வரை சுமார் 86 ஆயிரத்து 425 பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர். மேலும் அரசின் உத்தரவின்படி 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட முன்பதிவும் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட சுகாதார துணை இயக்குநர் பொற்கொடி கூறுகையில், '18 வயதுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு தொடங்கி வைத்தது. ராமநாதபுரத்தில் இத்திட்டத்தின்கீழ் சுமார் 7 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
மாவட்டத்தில் 810 கோவேக்சின் தடுப்பூசி, 4 ஆயிரத்து 750 கோவிஷீல்டு தடுப்பூசி என மொத்தம் 5 ஆயிரத்து 560 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. இந்தத் தடுப்பூசிகளை இரண்டு தவணையாக 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு செலுத்திவருகிறோம். தற்போது, 18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அரசு தனியாக வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்கும்.
மேலும், அதற்குத் தேவையான தடுப்பூசிகளை விரைவில் ஒதுக்கீடு செய்து வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. அதன்படி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகள் வந்தவுடன் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்படி முன்பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்' என்றார்.
இதையும் படிங்க: இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு!