ராமநாதபுரம் அருகே கள்ளர் தெருப் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவில் தகராறு ஏற்பட்டது. இதனால் இருதரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. முன்விரோதத்தில் அருண் பிரகாஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த சிலரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த லெப்ட் சேக், சதாம், அஜீஸ், காசிம் ரஹ்மான் ஆகிய 4 பேர் திருச்சி மாவட்டம் லால்குடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்நிலையில் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அவர் மீது திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் யுனிவர்ஸல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது. ஹெச். ராஜா மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.