ராமேஸ்வரம் நடராஜபுரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் கடலூருக்கு சென்று புதிதாக படகு வாங்கித் திரும்பும் வழியில் நடுக்கடலில் மூழ்கியது. இதனால் பத்து பேரில் எட்டு பேர் மாயமாகினர். இதில் நான்கு மீனவர்களை உயிருடன் நேற்று முன்தினமும், இரண்டு மீனவர்களை சடலமாக இன்றும் மீட்டனர். மேலும், மற்ற இரண்டு மீனவர்களை விரைந்து மீட்கக் கோரி 300-க்கும் மேற்பட்டோர் ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போதும் மாவட்ட ஆட்சியர் நேரில் வரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஆட்சியர் வராததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர், அலுவலர்கள் மீனவர்களை சமாதானம் செய்து அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர்.
பின்னர், ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் மீனவ கிராம மக்களிடம் பேசினார். அப்போது அவர், “மீனவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டது. அதன் நீட்சியாகத்தான் நான்கு மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் மற்ற 4 மீனவர்களை உயிருடன் மீட்க முடியவில்லை என்பது துன்பமானது” என்றார்.
மேலும் பேசிய அவர், உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி கிடைக்க அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது என்றார்.