ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சியில் 66 நிரந்தரத் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்களுக்கு மாதம்தோறும் ஊதியத்தில் பிடிக்கப்படும் பிஎஃப் பணத்தை உடனடியாக வரவு வைக்க வேண்டும், பி.எஃப் பணத்திற்கு வட்டி தர வேண்டும், பழுதாகிக் கிடக்கும் 15 பேட்டரி மிதி வண்டிகளை உடனடியாக சரி செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்து, நகராட்சி ஆணையாளர் செந்தில்குமரன் தலைமையில், தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, 6 மாதத்திற்குள் தூய்மைப் பணியாளர்களின் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் தங்களின் பணிகளை தொடங்க முடிவு செய்தனர். இந்த பேச்சுவார்த்தையில் நகராட்சி மேலாளர் ராஜேஸ்வரன், சுகாதார ஆய்வாளர்கள் மாரிமுத்து, சரவணன் தினேஷ்குமார், அண்ணல் அம்பேத்கர் துப்புரவு பணியாளர் சங்க தலைவர் சந்திரபோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.