ராமநாதபுரம் மாவட்டம், மேலமுந்தல் பகுதியில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் நான்கு இரு சக்கர வாகனங்களுடன் வந்த பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில், 192 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
மதுபாட்டில்களையும், இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றி மாரிமுத்துவை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல் பாம்பன் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாம்பனில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்டதில் பாம்பனை சேர்ந்த கணேசன், ரவிச்சந்திரன், மோகன் ஆகியோர் பதுக்கிவைத்திருந்த 1,518 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பாம்பன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
தப்பியோடிய குற்றவாளிகளை தீவிர குற்றத் தடுப்பு பிரிவினர் தேடி வருகின்றனர். பாம்பன் பகுதியில் ஆட்டோவில் மதுபாட்டில்கள் கடத்துவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்ததில், 240 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விக்னேஷ், ஆனந்த், சௌந்தர் ஆகியோர் மீது பாம்பன் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதுகுளத்தூரில் 94 பாட்டில்கள், கமுதியில் 20 பாட்டில்கள் என, ஒரே நாளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மதுபாட்டில்களை பறிமுதல் செய்து சிறப்பாக பணி புரிந்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் வெகுவாகப் பாராட்டினார்.