ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கியமானது ஆடி திருக்கல்யாணம். இந்த ஆண்டுக்கான ஆடி திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கி ஜூலை 31ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.
இவ்விழாவின் முதல் நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. கால பூஜையைத் தொடர்ந்து பர்வத வர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் நவசக்தி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்குள்ள அம்பாள் தங்கக்கொடி மரத்தில் காலை 10 மணியளவில் கொடியேற்றப்பட்டு, ஆடி திருவிழா தொடங்கியது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
மேலும், ஜூலை 25 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள திருக்கல்யாண உற்சவத்தை பக்தர்கள் இணையதளத்தில் நேரலையாக பார்க்கும் வகையில், யுடியூப்பில் நேரலையாக ஒளிபரப்பு செய்வதற்கு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துவருகிறது. ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆடி அமாவாசையன்று தர்ப்பணத்துக்காக பக்தர்கள் கூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதிக்கும் என்று கூறப்படுகிறது.