ராமநாதபுரம்: சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனின் 64ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டுவருகிறது. பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். திமுக சார்பில் போக்குவரத்துத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் எம்பி இணைந்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், "110 விதியின் கீழ் அதிகப்படியான உபயோகரமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுவருகின்றன. இது எல்லோருக்கும் சாதகமாகவும், எல்லா சமுதாயத்தினரும் பயன்பெறும் வகையில் உள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களின் அரசாக இந்த அரசு செயல்பட்டுவருகிறது. கண்களைப் பாதுகாப்பது போல் ஒடுக்கப்பட்ட மக்களை இந்த அரசு பாதுகாத்து வருகிறது. மேலும், இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு கட்சி மேலிடத்தில் பேசி முடிவெடுக்கப்படும்.
திமுக அரசு யாரையும் புறக்கணிக்காது, ஏற்கெனவே அவர் சொல்லியுள்ளது போல் வாக்களித்தவர்கள் நமது நண்பர்கள் இனிமேல் வாக்களிக்கபோரும் எனது நண்பர்களே என கூறி உள்ளார். அதனால், திராவிட முன்னேற்றக் கழகம் எல்லோருக்குமான அரசாகத்தான் இருக்கும்" என்றனர்.