ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கருவறையிலுள்ள மூலவர் சிலையை புகைப்படம் எடுத்து கோயில் குருக்கள் பக்தர் ஒருவரிடம் கொடுத்துள்ளார். அதற்கான பெரிய தொகையையும் அந்தப் பக்தரிடம் குருக்கள் வாங்கியுள்ளார். அந்தப் பக்தர் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றியதால், இவ்விவகாரம் பூதாகரமாகியது.
இதனைத் தொடர்ந்து குருக்கள் மீது எதிர்ப்பலை கிளம்பிய நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அக்குருக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோயில் தேவஸ்தான அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கோயில் இணை ஆணையரிடம் புகார் மனுவையும் அவர்கள் வழங்கியுள்ளனர்.
இந்தியாவிலுள்ள நான்கு முக்கிய சிவ திருத்தலங்களில் துவாரகா, பூரி, பத்ரிநாத் ஆகிய மூன்றும் வடக்கே உள்ளன. இதில் தெற்கே அமைந்துள்ள ஒரே சிவதலம் ராமேஸ்வரம் மட்டுமே. அதேபோல் 12 ஜோதிலிங்கத் திருத்தலங்களில் வடக்கே பதினொன்றும், தீர்த்தம், மூர்த்தி, தலம் ஆகிய முப்பெருமை கொண்ட காசிக்கு நிகரான புண்ணியத் திருத்தலமாக தெற்கே அமைந்துள்ள ஒரே திருத்தலமாக ராமேஸ்வரம் விளங்குகிறது.
ராமாயண தொடர்பு கொண்ட தலமாக அழைக்கப்படும் ராமேஸ்வரம், ராமன் (வைணவம்), சிவனை சிவலிங்க வடிவில் (சைவத்தை) பிரதிஷ்டை செய்தார் என்பதால், சைவர்களும் வைணவர்களும் கூடி வழிபடும் இடமாகவும் இது இருக்கிறது. எனவே இந்தியாவிலுள்ள இந்துக் கோயில்களில் ராமநாதசுவாமி கோயில் மிக முக்கியச் சிறப்பைப் பெறுகிறது.
ராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்துக்கு சிருங்கேரி சங்கராச்சாரியாரிடம் தீட்ஷை பெற்ற குருக்கள் மட்டுமே பூஜை செய்ய முடியும். இவர்களைத் தவிர சிவலிங்கம் அமைந்துள்ள கருவறைக்குள் செல்ல சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கும் நேபாள மன்னருக்கும் மட்டுமே அனுமதி உண்டு. மேலும், கருவறையில் வீற்றிருக்கும் மூலவரான சிவலிங்கத்தை புகைப்படம் எடுக்கக் கூடாது என விதியும் உள்ளது.
இந்நிலையில் , சிவலிங்கத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இரண்டு நாள்களாக வைரலாகியது. இந்தப் படத்தை வடமாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவருக்காக, ஆலயத்தின் கருவறையில் பணியாற்றும் குருக்கள் ஒருவர் தனது செல்போன் மூலம் படம் எடுத்துக் கொடுத்துள்ளார். அதற்காக அந்தப் பக்தரிடமிருந்து பெரும் தொகையையும் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஆகம விதிகளை மீறி ராமநாதசுவாமி கருவறையிலுள்ள மூலவரைப் படம் பிடித்த ஆலய குருக்கள் மீதும், இதற்கு துணையாக இருந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் இது குறித்து ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையாளரிடம், இந்து மக்கள் கட்சி சார்பாக புகார் மனுவும் நேற்று அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கோயில் பணத்தில் கையாடல் - கணக்காளர் கைது!