காவல்துறையில் சிறப்பாக குற்றவழக்குகளை விசாரிக்கும் நபர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் பதக்கங்களை வழங்கி வருகிறது. அதன்படி, 2020ஆம் ஆண்டுக்கான பதக்கப்பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சகம் அறிவித்தது. அதில், தமிழ்நாட்டில் 5 பெண் ஆய்வாளர்கள் உள்பட 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.
ஆண்டுதோறும் இவ்விருது அறிவிக்கப்பட்டுவந்தாலும், தமிழ்நாட்டின் தென்மண்டல காவல்துறையிலிருந்து இந்தப் பதக்கப்பட்டியலில் இதுவரை ஒரு பெண் காவலர்கூட இடம்பெற்றதில்லை. இந்தச் சூழ்நிலையில், தென்மண்டலத்தில் இருந்து இந்த பதக்கத்தைப் பெறவுள்ள முதல் பெண் என்ற பெருமையை ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் ஆய்வாளர் ஜான்சி ராணி பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது குடும்பமே காவல்துறை குடும்பம்தான். அப்பா, அக்கா, பெரியப்பா, அண்ணன் என பலரும் காவல்துறையில் பணிபுரிந்தனர். அப்பாவை பார்த்து நான் காவல்துறையில் சேரவேண்டுமென விரும்பினேன். 2004ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தல் ஒரு வருடம் பணிபுரிந்தேன். அதன் பின் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்தேன்.
2018ஆம் ஆண்டு அபிராமம் காவல் நிலையத்திற்கு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று வந்தேன். அப்போதுதான், நான் கொலைவழக்கை முதல் முதலாக விசாரித்தேன். அபிராமம் காவல் நிலையத்துக்குட்பட்ட கீழ் கொடுமலூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தீ வைத்துக் கொல்லப்பட்டார்.
ஆனால், அது தற்கொலை என்று கூறப்பட்டது. அவரது மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது. நான் தீவிர விசாரணை செய்தபோது, ஆறுமுகத்தின் மனைவி போதும்பெண்ணு என்பவர் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த வேல்முருகன் என்பவரின் உதவியுடன் அவரது கணவரை அடித்து தீ வைத்துக் கொலை செய்தது தெரியவந்தது.
இதன்பின்பு உரிய விசாரணை செய்து ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கை முடித்து 2019ஆம் ஆண்டு போதும்பொண்ணு, வேல்முருகன் ஆகிய இருவருக்கும் ஆயுள்தண்டனை பெற்று தந்தேன். நேர்மையாக விசாரணை நடத்த என்னுடன் பணி செய்யும் காவல் உதவி செய்தனர். நான் நேரடியாக ஐபிஎஸ் பணியில் சேரும் அலுவலர்களுடன் பணியாற்றியுள்ளேன். அவர்கள் என்னையும், எனது நேர்மையையும் பாராட்டினர்.
இந்தப்பதக்கம் பெறுவதற்கு ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் மற்றும் ஏடிஎஸ்பி லயோனல் இக்னேஷியஸ் இருவரும் மிக முக்கியக் காரணம். குறிப்பாக எஸ்பி அளித்த ஊக்கம். அவராலேயே எனக்கு மத்திய அரசின் இந்தப் பதக்கம் கிடைக்கிறது. இது என் நேர்மைக்கும் கடைமைக்கும் கிடைத்த பதக்கம்" என்றார்.
தொடர்ந்து உடைந்த குரலில் பேசத்தொடங்கிய அவர், "தனது அக்கா அமுதச் செல்வி காவல்துறையில் பணியாற்றி சில காலங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரையே என்னுடைய முன்னோடியாக கொண்டு செயல்பட்டு வருகிறேன். இனிமேலும் செயல்படுவேன் என்றார்.
நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான பதக்கப்பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து ஐந்து பெண் காவலர்கள் இடம்பெற்றிருப்பதும், முதல் முறையாக தென்மண்டலத்தில் இருந்து பதக்கம் ஜான்சி ராணியையும் பாராட்டுவதில் ஈடிவி பாரத் மகிழ்ச்சியடைகிறது.
இதையும் படிங்க: '23 ஆண்டுகள், நாள்தோறும் 40 கி.மீ. சைக்கிள் பயணம்' - 51 வயது காவலரின் கதை