ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரைச் சேர்ந்தவர் தனசேகரன். இவரது மனைவி பழனி செல்விக்கு அண்மையில் குழந்தை பிறந்தது.
இந்தக் குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டதில் இருந்து குழந்தைக்கு காலில் வீக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், குழந்தை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தது.
பின்னர் அரசு மருத்துவர்கள் பரிந்துரையின்பேரில் அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
40 நாள்கள் அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் டிஸ்சார்ஜ் ஆகி கடந்த சில நாள்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மீண்டும் கொண்டு வந்து அனுமதித்துள்ளனர். இன்று மதியம்(டிச.05) அந்தக் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
மருத்துவர்களின் அலட்சியப் போக்காலும் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதில் மெத்தனம் காட்டியதாலும் தன்னுடைய குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி மருத்துவமனை ஊழியர்களுடன் குழந்தையின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. தன்னுடைய குழந்தைக்கு நிகழ்ந்ததைப் போல வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக மருத்துவமனை நிர்வாகம் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ளும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தையின் உறவினர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: 550 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!