ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தெற்கு கடற்கரை பகுதியில் தினந்தோறும் மீனவர்கள் கடலில் மிதக்கும் குப்பைகளை சுத்தம் செய்து வருவது வழக்கம். அதுபோல இன்று (ஏப்.05) தனுஷ்கோடி தெற்கு துறைமுகப் பகுதியில் உள்ள மீனவர்கள் கடற்கரைப் பகுதியில் உள்ள குப்பைகளை அள்ளும் போது காடியன் என்று சொல்லக்கூடிய சிறிய ரக பிளாஸ்டிக் டப்பாவிலிருந்து இரும்பு சத்தம் கேட்டுள்ளது.
அதனை மீனவர்கள் எடுத்து பார்த்தபோது உள்ளே துப்பாக்கிக்கு பயன்படுத்தக்கூடிய தோட்டாக்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தனுஷ்கோடி காவல் துறையினருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பின் தனுஷ்கோடி காவல் துறையினர் கியூ பிரிவு காவலருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பின்னர் தோட்டாக்களைப் கைப்பற்றிய கியூ பிரிவு காவலர்கள், முதல் கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய ரக தோட்டாக்கள் மிஷின் கன்கள், கைத்துப்பாக்கிகளில் பயன்படுத்தக்கூடியவை எனத் தெரியவந்துள்ளது. இது இலங்கை ராணுவத்தினருடையதா அல்லது இந்திய ராணுவத்தினருடையதா என்பது குறித்து காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கைக்கு மிக அருகில் ராமேஸ்வரம் உள்ளதால் பலர் இலங்கையிலிருந்து கடல் வழியாக வருகின்றனர். நேற்றும் அதேபோன்று இரு அகதிகள் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். இவர்களை கைது செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தியக் கடலோர காவல்படை அலுவலர்கள் சர்வதேச எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி அந்நியர்கள் ஊடுருவலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னதாக அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று தனுஷ்கோடி பகுதியில் 9 மில்லி மீட்டர் அளவுடைய மூன்று தோட்டாக்களும் 5.6 மில்லி மீட்டர் அளவுடைய நான்கு தோட்டாக்களும் என மொத்தம் ஏழு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.