ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். அதே பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வரும் இவருக்கு ஆன்லைன் மூலம் புதிதாக பிரபல நிறுவனத்தின் செல்போன் விநியோக உரிமம் தருவதாக தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர்கள் பிரபல நிறுவனத்திடம் விற்பனை விநியோக உரிமம் பெற மூன்று லட்சம் ரூபாய் செலுத்தும்படி கூறியுள்ளார்.
அதனை நம்பி, அப்துல் ரகுமான் முதலில் 15,200 ரூபாய், இரண்டாவது தவணையாக 49,000 ரூபாயை கர்நாடக மாநிலத்திலுள்ள வங்கி கணக்கிற்கு செலுத்திள்ளார். அதற்கு பிறகும் விற்பனை அங்கீகாரம் வழங்காததால் சந்தேகமடைந்த அவர் மறுபடியும் தொடர்பு கொண்டபோது, மேலும் மூன்று லட்ச ரூபாய் தந்தால் தான் விநியோக உரிமை தர முடியும் என்று கூறியுள்ளனர்.
இதனால் அவர்கள் மீது சந்தேகமடைந்த அப்துல் ரகுமான், ராமநாதபுரத்தை சேர்ந்த மற்ற விற்பனை பிரதிநிதிகளிடம் இதுகுறித்து விசாரித்தார். அப்போது தான் அவருக்கு இது மோசடி செயல் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அப்துல் ரகுமான் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், முதற்கட்டமாக கர்நாடகாவிலிருந்து வந்த மூன்று செல்போன் எண்கள், வங்கிக் கணக்கு விபரங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.