கரூர் மாவட்டம் வையாபுரியை சேர்ந்தவர் மதன்குமார். இவரின் நண்பர் ஒருவர் மூலமாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த முனியச்சாமி என்பவர் அறிமுகமாகிறார். அவர், தன்னை கோபுர விமானத்தை கதிரியக்கத்தில் இருந்து பாதுகாக்கும் உதிரி பாகங்கள், இரிடியம் விற்பனை செய்பவராகவும், லண்டனில் உள்ள பிரபல நிறுவனத்தின் தென்னிந்திய பிரதிநிதியாகவும் உள்ளதாக கூறி அடையாளப்படுத்தி உள்ளார்.
இதனிடையே, இரிடியம் வாங்க ரூ. 6 கோடி தேவைப்படுவதாகவும், 40 நாள்களில் இரண்டு மடங்காக திரும்பித் தருவதாகவும் முனியச்சாமியிடம் தொடர்புடைய வீரபாகு, சுகுமார், பாஸ்கரன், கணபதி இணைந்து மதனிடம் ஆசைவார்த்தைக் கூறி ஆர்வத்தை தூண்டியுள்ளனர். இதையடுத்து, ரூ. 6 கோடியை இரண்டு தவணையாக 2015ஆம் ஆண்டு மதனிடமிருந்து முனியச்சாமி பெற்றுள்ளார்.
பணத்தை கொடுத்து 40 நாள்கள் கடந்த நிலையில் கொடுத்த பணத்தை கேட்ட போது, சரியான பதிலை அளிக்காமல் ஐந்து ஆண்டுகளாக மதனை முனியச்சாமி அலைக்கழித்து வந்துள்ளார். ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து பணம் தருவதாகக் கூறி முனியச்சாமி ஏமாற்றி வந்த நிலையில், தான் கொடுத்த ரூ. 6 கோடியை திரும்ப பெற வேண்டும் என்ற உந்துதலில் நேரடியாக ராமநாதபுரத்திற்கு மதன்குமார் சென்றுள்ளார்.
அப்போது மதன்குமாரை தாக்கிய முனியச்சாமி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர், இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் மதன்குமார் புகார் அளித்தார். அதனடிப்படையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சுகுமார் என்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இந்த மோசடியில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் இறங்கிள்ளனர்.