உலகம் முழுவதும் ஏப்ரல் 22ஆம் தேதியன்று சர்வதேச பூமி தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்த தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடும் நோக்கில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள பக் ஜல சந்தி கடல் பகுதியில் ஸ்கூபா பயிற்சி பெற்ற 2 பெண்கள் உட்பட 10 பேர் ஒரு மணி நேரம் கடலுக்கு அடியில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். அப்பணியின்போது 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அகற்றியுள்ளனர்.
மண்டபம் வன அதிகாரி சதிஷ் தலைமையில் வனவர்கள் குணசேகரன், ஆனந்த், ஸ்கூபா நீச்சல் பயிற்சி பெற்ற தீபிகா ஆனந்த், இந்திய வன ஆராய்ச்சி மாணவர்கள், வேட்டைத் தடுப்பு காவலர் ஆகியோர் இப்பணியில் பங்கேற்றனர்.