ராமநாதபுரம் மாவட்டத்தில், கடந்த 2007 ஆம் ஆண்டு கடல் வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற 2,500 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் எனப்படும் வெடி பொருளை ராமநாதபுரம் கியூ பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்து, பரமக்குடி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பான வழக்கு பரமக்குடி நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து, ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல் முறையீட்டு வழக்கும் கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்தது.
இவ்வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 50 கிலோ எடையுள்ள 50 மூடை (2,500கிலோ) பொட்டாசியம் நைட்ரேட், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் கமுதி தனி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள தனி அறையில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வந்தது. தற்போது கரோனா ஊரடங்கால் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால் வெடி பொருளை அழிக்க நீதிமன்ற உத்தரவிற்காக காவல்துறையினர் காத்திருந்தனர்.
தற்போது நீதிமன்ற உத்தரவின்பேரில், சென்னை வெடிபொருள் கண்டறிதல், அழித்தல் பிரிவு ஆய்வாளா் ஜெயராமன் மற்றும் சாா்பு-ஆய்வாளா் ஜெயராமடு தலைமையில், ராமநாதபுரம் கியூ பிரிவு காவல் ஆய்வாளா் மகேஸ்வரி, சாா்பு-ஆய்வாளா் மதுமதி, கமுதி தனி ஆயுதப்படை ஆய்வாளா் மோகன் ஆகியோா் வெடி மருந்து மூட்டைகளைப் பாதுகாப்புடன் லாரியில் ஏற்றி ஆள் நடமாட்டம் இல்லாத குண்டாற்றுப் பகுதிக்குக் கொண்டு சென்று தீ வைத்து அழித்தனர்.
ஒரே கட்டமாக வெடி மருந்தை அழித்தால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால், முதல்கட்டமாக 500 கிலோ வெடி மருந்தை, கமுதி அருகே காட்டுப் பகுதியில் தீ வைத்து பாதுகாப்பாக அழித்தனா். மீதமுள்ள வெடி மருந்தை அடுத்து வரும் நாள்களில் அழிக்க திட்டமிட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
பெய்ரூட்டில் நடைபெற்ற வெடி விபத்துக்குப் பின்னர், தமிழ்நாட்டில் நீண்ட நாள்களாக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் வெடிபொருள்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புட்செல் போலீஸ் எனக் கூறி பணம் திருட்டு - 3 பேர் கைது!