ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உள்ளது. பாதிப்புக்கு உள்ளானவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அவர்கள் தங்கியிருந்த பரமக்குடி, கீழக்கரை, ஆர்.எஸ். மங்கலம் ஆகிய பகுதிகளில் 5 கிலோமீட்டர் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்து தினசரி கிருமி நாசினியை தூய்மைப் பணியாளர்கள் மூலம் தெளித்துவருகின்றனர்.
சுகாதாரத் துறை பணியாளர்கள் அப்பகுதியில யாருக்கும் சளி, இருமல் உள்ளதா என விசாரணை செய்துவருகின்றனர். இதற்கிடையே பரமக்குடியைச் சேர்ந்த இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் இன்று ஆர்.எஸ். மங்கலம் பரஹத் தெருவைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
தற்போது அந்தக் கல்லூரி மாணவருக்கு எவ்வாறு கரோனா வைரஸ் பரவியது என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது. மேலும், அவர் தங்கியிருந்த பகுதி சீல்வைக்கப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.