இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான வீர ராகவராவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
“ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 1,916 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு தேவையான வசதிகள், வெயில் நேரங்களில் நிழல் பந்தல்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மூலமாக செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 1,950 என்ற இலவச அலைபேசி மூலமாக 3,296 புகார்கள் வந்துள்ளன. அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சி விஜில் ஆப் மூலமாக வந்த 35 புகார்களுக்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை காவல் துறை மூலமாக தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் விதிக்குட்பட்டு சாதி, மத இன பேதமின்றி வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாக்கு சேகரிக்க செல்லும்போது, அவர்களை இடைமறிப்பவர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை 103 இடங்களில் உள்ள 118 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள 11 ஆயிரத்து 725 வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு மூலமாகவும், பாதுகாப்பை உறுதி செய்து நியாயமான முறையில் தேர்தல் நடைபெற உரிய வசதிகள் செய்து தரப்படும்” என்றார்.