புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையில் மருந்துகடை நடத்தி வருபவர் சம்பத்குமார் (55). இவரது மருந்துகடைக்கு வந்த நபர் ஒருவர் மருந்துகடைகளில் மாத்திரை வாங்கிவிட்டு சிறிது நேரம் கடையை நோட்டம் விட்டார். பின்பு கடையில் விளம்பர பதாகையில் இருந்த உரிமையாளரின் செல்போன் நம்பரை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டாதாக கூறப்படுகிறது.
அவர் சென்ற சிறிது நேரத்தில் மருந்துகடை உரிமையாளர் சம்பத்குமாரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், உங்களது உறவினர் ஒருவர் மரிங்கிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் என்றும், அவர் உங்களது செல்போன் எண்ணை கொடுத்து தகவல் தெரிவிக்கும்படி கூறியதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனையடுத்து சம்பத்குமார் பதட்டத்தில் கடையை பூட்டாமல் மரிங்கிப்பட்டி பேருந்து நிலையத்திற்கு சென்று பார்த்தபோது யாரும் விபத்தில் சிக்கவில்லை என்பது தெரியவந்தது. பின்னர் கடைக்கு திரும்பி வந்து பார்த்த போது கல்லாபெட்டியில் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து நூதன திருட்டில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியில் சந்தேகபடும்படியாக சுற்றிதிரிந்த இளைஞரை சம்பத்குமார் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல்(28) என்பதும், மருந்துக்கடையில் திருடியதும் தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: சரக்கு வாகனங்களில் திருடிய 5 பேர் கைது - தனிப்படையினர் அதிரடி