புதுக்கோட்டை: மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகே தாமரைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தொட்டிச்சி அம்மா (வயது 53). இவரது மகள் திருமணமாகி, புதுக்கோட்டை மாவட்டம், சிப்காட் அருகே மாணிக்கம்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் தொட்டிச்சி அம்மா, தனது மகளை காண மூன்று சவரன் தங்கச் சங்கிலி மற்றும் ரொக்கப் பணம் பத்து ஆயிரம் ரூபாயுடன் புதுக்கோட்டை வந்துள்ளார்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கீரனூர் நோக்கி செல்ல இருந்த தனியார் பேருந்தில் மாணிக்கம்பட்டி செல்வதற்காக தொட்டிச்சி அம்மா பேருந்தில் ஏறி அமர்ந்து உள்ளார். அப்போது தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக பேருந்து இருக்கையில் அருகில் அமர்ந்து இருந்த புதுக்கோட்டை ஐடிஐ காலனியைச் சேர்ந்த இளம் பெண் ஷாலினியிடம் (வயது 23) தங்க நகை மற்றும் ரொக்கப்பணம் இருந்த மஞ்சப்பையை கொடுத்து விட்டு இறங்கி உள்ளார்.
அப்போது பேருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டு திரும்பிய மூதாட்டி பேருந்து கிளம்பியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார். உடனடியாக அருகில் இருந்த காவல் கட்டுப்பாட்டு அறையில் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் மூதாட்டியுடன் சென்று தேடிப் பார்த்து உள்ளனர். அப்போது இளம்பெண் ஷாலினி, மூதாட்டி கொடுத்த மஞ்சப்பையுடன் பேருந்து நின்ற இடத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அந்த பெண்ணிடம் விசாரித்த பொழுது மஞ்சப்பையை கொடுத்துச் சென்ற மூதாட்டியை காணவில்லை என்பதால் பையுடன் பேருந்தில் இருந்து கீழே இறங்கி மூதாட்டியை தேடியதாக கூறி உள்ளார்.
இதனையடுத்து நகை மற்றும் ரொக்க பணத்துடன் உள்ள மஞ்சப்பையை இளம்பெண்ணிடம் பெற்று, மூதாட்டியிடம் பத்திரமாக காவல்துறையினர் ஒப்படைத்தனர். நகை மற்றும் ரொக்கப்பணத்தை நேர்மையுடன் ஒப்படைத்த இளம் பெண் ஷாலினிக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஒடிசா கேபினட் அமைச்சரான தமிழக அதிகாரி... யார் இந்த வி.கே.பாண்டியன்! ஐ.ஏ.எஸ் அதிகாரி - அரசியல்வாதி!