வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சியினரும் ஆயத்தமாகி வருகின்றனர். தமிழ்நாட்டில் பட்டி தொட்டிகளில் அனைத்துக் கட்சிகளின் தேர்தல் பரப்புரையும் அனல் பறக்க நடந்துவருகிறது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் படு பிஸியாக தேர்தல் வேலையில் ஈடுபட்டிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சரவணனிடம் சில நிமிடங்கள் பேசினோம்.
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்ததற்கான காரணம்?
2018ஆம் ஆண்டில் தான் மக்கள் நீதி மையத்தில் சேர்ந்தேன். கஜா புயலின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டேன். அப்போது கட்சி மீது ஒரு ஈடுபாடு வந்தது. இதற்கிடையில் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது, ”ஏன் இந்தக் கட்சிக்குள் வர விரும்புகிறீர்கள்?” என அவர் என்னிடம் கேட்டார். அதற்கு, ”ஊருக்கு உழைத்திட ஒரு யோகம் வேண்டும். அதற்காக இக்கட்சியினை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்” என பதிலளித்தேன். அதற்கு மெல்லிய புன்னகை செய்தார், தலைவர் கமல்ஹாசன். இப்படித்தான் என் அரசியல் பயணம் தொடங்கியது.
அரசியலில் திரைக்கலைஞர்களின் பிரவேசத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
சமூகத்தை சீர்திருத்துவதற்கான ஒரு கருவிதான் அரசியல். திரைக்கலைஞர் அரசியலுக்கு வந்தால் நல்லாவா இருக்கும் என்று எதிர்க்கட்சி தரப்பில் இருந்து நிறைய விமர்சனங்கள் வருகின்றன. ஆனால் எம்ஜிஆர் ஒரு நடிகர், ஜெயலலிதா ஒரு நடிகை, கருணாநிதி அவர்கள் சினிமா துறையில் இருந்து வந்தவர்தான். ஒரு கதாபாத்திரத்தை திரையில் பார்க்கும்போது, அது நமக்கு ரோல்மாடல் ஆகிறது. அப்படி இருக்கும்போது நடிப்புத் துறையிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் மக்களின் நலனைப் பற்றி சிந்திப்பார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
விராலிமலை தொகுதியின் பிரச்னைகள்?
கடந்த தேர்தலில் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் ஒன்றும் செய்யவில்லை. தோற்றுப்போன நபரும் முயற்சி ஏதும் எடுக்கவில்லை. அதனால் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். அதனால் நிச்சயமாக எனக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. வெற்றி பெற்றால் நிறைய திட்டங்களை நிறைவேற்ற நான் திட்டமிட்டுள்ளேன்.
விராலிமலை தொகுதிக்கான உங்கள் திட்டங்கள் என்னென்ன?
- அன்னவாசல் பகுதியில் ஒரு கல்லூரி
- விராலிமலை பகுதியில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி
- திறன் மேம்பாட்டு மையம்
- ஒவ்வொரு ஊராட்சியிலும் இலவச பயிற்சிப் பட்டறை
- பெண்களுக்கான இலவச தொழில் முனைவோர் மையம்
- ஒவ்வொரு ஊராட்சியிலும் மாதம்தோறும் இலவச மருத்துவ முகாம்
- தடையில்லா குடிநீர் விநியோகம்
- இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது மக்கள் நீதி மையம் தான். அதனை முழுமையாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளேன்.
விராலிமலை தொகுதியில் என்ன மாற்றம் கொண்டு வருவீர்கள்?
ரவுடியிசம், ஊழல் என கட்சிகளால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் புதுக்கோட்டையில் விராலிமலை பகுதியில் இருக்கிறார் என்பதுதான் பெருமையே தவிர, அவருடைய செயல்பாடுகளால் எவ்வித பெருமை கிடையாது. அதே தொகுதியில் எனக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் நான் வேண்டாம் என்று தான் சொல்லுவேன்.
என்னுடைய எண்ணம் தொகுதி மக்களுக்கு நன்மை செய்தால் போதும் என்பது தான். அதேபோல, புதுக்கோட்டை - விராலிமலை சாலையில் இரண்டு லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெறுவதற்காக தொழில் முனைவோர் கழகம் உருவாக்கப்படும். அதற்கான இடம் உள்ளிட்டவைகளை திட்டமிட்டிருக்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க:அரசியல் ஆசையை வெளிப்படுத்திய வைகோ மகன்