உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பெருந்தொற்று இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. அதன் பரவலைத் தடுக்க, தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டப் பரவல் நிலையை அடைந்திருக்கும் கோவிட்-19 பெருந்தொற்று நோயைத் தடுக்க, மே 7ஆம் தேதி வரை முழுமையான முடக்கத்தை நீட்டிப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும், வைரஸ் தொற்றின் சமூகப் பரவலைத் தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடவும், 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், ஆலைகள், வணிக நிறுவனங்கள், சிறு, குறு நிறுவனங்கள், சாலையோரக் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கரோனா வைரஸின் அச்சுறுத்தல் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதித்திருந்தாலும், நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு விவசாயிகளை அதிகம் பாதித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்த காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை விற்க முடியாமலும், உரிய விலை கிடைக்காமலும், பரிதவித்துவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, உலகளவில் முந்திரிக்குப் புகழ்பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தை அடுத்துள்ள ஆதனக்கோட்டை கிராமத்தில் முந்திரி விவசாயத்தை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயப் பெருங்குடி மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறார்கள். இங்கு, ஆண்டுதோறும் சித்திரை மாதம் முந்திரிப்பழம் பறிக்கப்படுவது வழக்கம்.
இந்தாண்டு கரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தால், முந்திரி பழங்கள் விற்பனை ஆகாமல் வீணாகி கீழே கொட்டும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும், அறுவடை செய்யப்பட்டிருந்த முந்திரிகளை விற்பனை செய்யவும் வழியின்றி முந்திரி விவசாயிகள் அவதிப்பட்டுவருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி மலையாண்டி கூறுகையில், “வெளியூர்களில் இருந்து வருபவர்கள் இங்கு வந்து முந்திரி வாங்காமல் ஒருபோதும் செல்வதில்லை. தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்ட ஆதனக்கோட்டை முந்திரியின் ஃபேமஸ். கஜா புயலின் போது ஏற்பட்ட அந்த பாதிப்பு தற்போது வரையிலும் நீடித்துக் கொண்டிருக்கையில், அதிலும் இந்த ஆண்டு தண்ணீர் இல்லாத காரணத்தினால் முந்திரிப் பழ விளைச்சல் குறைந்துவிட்டது.
இந்த சீசனில் தான் முந்திரிப்பழம் நன்றாக விற்பனையாகும். ஆனால் ஊரடங்கு உத்தரவால் அறுவடைச் செய்த முந்திரி பழங்கள் விற்பனை ஆகாமல் வீணாகி கீழே கொட்டும் நிலைமை ஏற்பட்டுள்ளது. விவசாயத்தை நம்பியிருக்கும் எங்கள் மக்கள் வருமானம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், ஆதனக்கோட்டைப் பகுதியில் வாழ்ந்துவரும் ஆயிரம் குடும்பங்கள் விவசாயத்தையும், விவசாயக் கூலித் தொழிலையும் நம்பி இருப்பவர்கள். தமிழ்நாடு அரசு ஆதனக்கோட்டை பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவித்து அப்பகுதியில் உள்ள விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க சொட்டு நீர் பாசனம் அமைத்து உதவி செய்தால் இன்னும் பல காலத்திற்கு அங்கு விவசாயம் செழித்தோங்கும்” என்று கவலையுடன் தெரிவித்தார்.
முந்திரி விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கேற்ப இழப்பீடும், நீண்டநாள் கோரிக்கையான சொட்டு நீர் பாசனமும் அமைத்துக் கொடுக்க தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும் என்பதை கோரிக்கையாக வைக்கின்றனர்.
இதையும் படிங்க : மலைக்கிராம மக்களுக்கு உதவிய தனியார் சோலார் நிறுவனம்