புதுக்கோட்டை மாவட்டம் மேல்மங்களம் ஊராட்சியை சேர்ந்த கருங்குழிக்காடு குடியிருப்பு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறு பழுதானதால், அப்பகுதி மக்கள் குடி தண்ணீரை காசுகொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "ஆழ்குழாய் கிணறு பழுதாகி பத்து மாதங்கள் ஆகிவிட்டன. மக்கள் பயன்பாட்டிற்கு அமைத்து கொடுத்த சின்டெக்ஸ் போர்வெலில் குளிக்க மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். தினக்கூலி வருமானத்தில் கிடைக்கும் வருமானத்தில் நாள்தோறும் குடிநீருக்காக ஒரு தொகையை செலவழிக்கிறோம். எங்கள் சிரமத்தை புரிந்துகொண்ட அருகிலுள்ள பள்ளிவாசல் நிர்வாகத்தினர் எங்கள் குடியிருப்பு மக்களுக்கு தண்ணீர் தருகின்றனர்.
ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பள்ளிவாசலுக்கு தண்ணீருக்காக அறந்தாங்கி கட்டுமாவடி முக்கிய சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. சாலையை கடக்கும்போது விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்திலேயே சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம். எங்கள் கிராம பகுதிக்கு புதிதாக போர்வெல் அமைக்க சுமார் 8 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும் இதுவரை செயல்படுத்தவில்லை.
எங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள குடி தண்ணிர் பிரச்னைக்கு உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்" என்பதே அம்மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: ரம்மி விளையாட்டில் பணம் இழந்தவரின் சோக முடிவு! கடைசி நிமிடத்தில் மனைவிக்கு அனுப்பிய ஒலிப்பதிவு!