புதுக்கோட்டை மாவட்டம் வீரப்பட்டி ஊராட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலான தூர்வாரும் பணியை அமைச்சர் விஜய பாஸ்கர் தொடங்கி வைத்தார்.பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, " மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள ஏரி குளங்களை தூர்வாரும் குடிமராமத்து பணிகள் தொடங்கியுள்ளன.
மேலும், பொதுப்பணித் துறையின் கட்டுபாட்டில் இல்லாத குளங்கள் மற்றும் ஊரணிகளை ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் தூர்வார ரூ.1,250 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். அதன் ஒரு அங்கமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 200 சிறு பாசனக் கண்மாய்களும், 450 குளங்கள் மற்றும் ஊரணிகளும் தூர்வாரப்படவுள்ளன. பொதுமக்கள் பங்களிப்புடன் இப்பணிகள் நடைபெற இருக்கின்றன. இப்பணிகளை மழை காலத்திற்கு முன்பே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதன்மூலம் மழை காலத்தில் மழைநீர் சேகரிக்கப்பட்டு விவசாயம் செழிக்க இந்தத் திட்டம் மிகப் பயனுள்ளதாக இருக்கும். எனவே பாசனதாரர் சங்கத்தினர் இத்திட்டத்தினை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.