புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதியருக்கு, மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்தத் தம்பதியரின் 14 வயது சிறுமி, நேற்று (மே.18) வீட்டிலிருந்து சற்று தொலைவிலுள்ள ஊற்றில் இருந்து தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளார்.
தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோரும், உறவினர்களும் அப்பகுதியில் தேடிவந்தனர். அப்போது அங்குள்ள தைல மரக் காட்டுப் பகுதியில் உடலில் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளார். மூச்சுவிட சிரமத்துடன் கிடந்த அவரை மீட்ட பெற்றோரும், உறவினர்களும் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த கந்தர்வகோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் ஆகியோரும் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சிறுமி, இன்று காலை உயிரிழந்தார்.
இறப்புக்கு முன்னர் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், தன்னை சிலர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்க முயற்சித்தாக, காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியைக் கடத்திச் சென்ற நபர்கள் யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பது உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்தப் பின்னரே தெரியவரும் எனக்கூறும் மருத்துவர்கள், சிறுமி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படவில்லை என்றும், காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் வெளியான முதல்கட்ட அறிக்கையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க... சிறுமியை கடத்திய இளைஞருக்கு போலீஸ் வலை!