புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் நேற்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில், ராஜ கோகிலா (வயது 65) தனது வீட்டுத் தொட்டியில் மின்சார வயர் அறுந்து விழுந்தது தெரியாமல் தொட்டியின் அருகே சென்றுள்ளார்.
இந்நிலையில், அந்தத் தொட்டியின் அருகே சென்ற அவர், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, இதனை அறியாத அவரது மருமகள் ராதிகா (வயது 31) தண்ணீர் எடுக்கச் சென்ற தனது மாமியாரைக் காணவில்லை என தொட்டி அருகே சென்றுள்ளார்.
அங்கு மாமியார் ராஜ கோகிலா விழுந்து கிடப்பதைக் கண்ட ராதிகா அவரைத் தூக்க முயன்றுள்ளார். இதில், ராதிகாவும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி காவல் துறையினர், இருவரது உடல்களையும் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.
இதையும் படிங்க:இரவு முழுவதும் போடப்பட்ட செல்ஃபோன் சார்ஜ் - பேட்டரி வெடித்து சிறுமி உயிரிழப்பு!