புதுக்கோட்டை: திருமயம் அருகே உள்ள விராச்சிலை பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அங்கு உள்ள திடலில் மஞ்சுவிரட்டு போட்டி நேற்று (நவ. 5) நடைபெற்றது.
இப்போட்டியில் புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகளும் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
அனுமதி இன்றி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு
மக்கள் பலரும் திடலில் குவிந்திருந்தனர். கூட்டத்தில் அவிழ்த்து விடப்பட்ட காளையை வீரர்கள் அடக்க முயற்சித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாகக் காளை மாடு முட்டியதில் கருப்பையா (52) என்ற பார்வையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தேவகோட்டை சேர்ந்த சிவப்பிரகாஷ் (35) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து படுகாயமடைந்த 38 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு திருமயம் வட்டாட்சியர் நிகழ்ச்சியை நிறுத்த உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்காத நிலையில் மஞ்சுவிரட்டு நடத்திய விராச்சிலை சேர்ந்த போட்டி ஏற்பாட்டாளர்கள் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து பனையப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குடித்துவிட்டு அடுத்தவரின் வீட்டில் புகுந்த அதிமுக முன்னாள் எம்.பி.,க்கு அடி, உதை!