தமிழகத்திலேயே முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும், புதுக்கோட்டை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாக்கப்பட வேண்டிய சமணர் காலத்து ஓவியங்கள் அடங்கிய இடமாகவும் சித்தன்னவாசல் அமைந்துள்ளது. இது குடைவரை ஓவியங்கள் மற்றும் குகை ஓவியங்களுக்கும் மிகவும் புகழ் பெற்றவை. இவை கி.பி. 7 மற்றும் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள், சமணர்கள் கால மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டவை.
இந்தியா விடுதலை அடைந்த பிறகும் போதிய பராமரிப்பின்றி புகை படிந்து இருந்த இக்குகைகளும், குகை ஓவியங்களும் 1990 ஆண்டுகளில் நிறம் மங்கத் துவங்கியதால் செயற்கையாக பயன்படுத்தும் வர்ணங்களை பயன்படுத்தி புதுப்பிக்கப்பட்டது. புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் செல்லும் வழியில் சுமார் 16 கிலோ மீட்டரில் அமைந்த இவ்விடத்தை தமிழக அரசும், தொல்லியல் துறையும் பாதுகாத்து வருகின்றன.
சுமார் 70 மீட்டர் உயரமே உள்ள இக்குன்றுகளின் மேல் சமணர்களின் படுகையும், தவம் செய்யும் இடமும், பல இடங்களில் குடைவறைகளும் காணப்படுகின்றன. இந்த புகழ்பெற்ற மலையை தொல்லியல் துறையும், அதனைச் சுற்றியுள்ள முத்தமிழ் பூங்கா, இசை நீரூற்று, படகு குழாம் ஆகியவற்றை தமிழக அரசும் நிர்வகித்து பராமரித்து வருகின்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக சுகந்தி இருந்தபோது சித்தன்னவாசலை சுற்றுலாத்தலமாக மாற்றி முத்தமிழ் பூங்கா, இசை நீரூற்று, படகு குழாம் ஆகியவற்றை மேம்படுத்தி செயல்படுத்தினார். அதிமுக ஆட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த கோகுல இந்திரா இந்த சித்தன்னவாசலுக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கி ஒரு கோடி ரூபாய் மதிப்பில் இசை நீரூற்று, படகு குழாம், முத்தமிழ் பூங்கா ஆகியவை சீரமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்ததால், புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்களுக்கு இது ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாகவும் மற்றும் பொழுதுபோக்கு இடமாக இருந்தது. இதனால் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்கு வருமானமும் வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக முத்தமிழ் பூங்காவில் உள்ள மயில், புலி, பேகன், டால்ஃபின் சிலைகள் சிதிலமடைந்தும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆனந்தமாக விளையாடும் ஊஞ்சல் உள்ளிட்ட பொருட்கள் பராமரிப்பு இன்றியும் காணப்படுகிறது.
அதுபோல படகு குழாமில் உள்ள எண்ணற்ற படகுகள் உடைந்து, ஓட்டை விழுந்து பயனற்று கிடக்கிறது. குறிப்பாக பொதுமக்களின் ஆனந்தத்தை அளப்பரிய செய்த இசை நீரூற்று செயல்படாமல் உள்ளது. இதைவிட, சுற்றுலாவாசிகளின் முக்கிய அடிப்படை தேவைகளில் ஒன்றான கழிப்பறை பராமரிப்பின்றி, சுகாதாரமற்று கிடப்பதால் பொதுமக்கள் இதை பயன்படுத்த அச்சப்படுகின்றனர்.
எனவே, எதிர்வரும் கோடை காலம் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களை கவனத்தில் கொண்டு, அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து சித்தன்னவாசல் பொழுதுபோக்கு அம்சங்களை சீரமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகப் புகழ்பெற்ற சித்தன்னவாசல் சுற்றுலா தளத்தை சீரமைத்து, பராமரித்தால் சுற்றுலா பயணிகள் வருவது மட்டுமின்றி, அது மாவட்ட நிர்வாகத்திற்கு மிகுந்த வருமானம் தரக்கூடிய ஒன்றாக திகழும் என்பதில் ஐயமில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
இதையும் படிங்க: Maha shivratri: தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நூதன நேர்த்திக்கடன்