புதுக்கோட்டை: தமிழக அரசு நீட் விலக்குக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை காவேரி பிரச்சனையில் கொடுப்பதில்லை என்று தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான நல்லசாமி பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாதந்தோறும் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்து விடும் தீர்ப்பு இருக்கும் வரை தமிழகம் கர்நாடகாவின் வடிகாலாகவே இருக்கும். தினந்தோறும் தண்ணீர் திறப்பதற்கும், தினசரி நீர் பங்கீடு தீர்ப்பை பெறுவதற்கும் தமிழக அரசு உடனடியாக மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். அப்போதுதான் காவிரி பிரச்சனைக்கு ஒரு தீர்வு ஏற்படும் என்று கூறினார்.
மேலும், தமிழகத்தில் ஆட்சி அமைத்தால் நீட் விலக்கு உடனடியாக அமல்படுத்தப்படும் என்று கூறிய திமுக அரசு, தற்போது தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி செங்கோட்டையை பிடித்தால் தான் தீர்வு என்று கூறி வருகிறது. கலப்படத்தை ஒழித்தால் பொதுமக்களுக்கு நோய் வரும் தன்மை குறையும்.
இதையும் படிங்க: டி.என்.பி.எஸ்.சி தலைவரின் தகுதி என்ன? தமிழக அரசிடம் விளக்கம் கேட்ட ஆளுநர்!
இதனால் மருத்துவமனைகள் தேவை குறைய தொடங்கி மருத்துவ படிப்பிற்கான மவுசும் வெகுவாக குறையும் என்றார். மேலும், 75% மருந்து கடைகள் மற்றும் 50% மருத்துவமனைகள் காணாமல் போகும். பொறியியல் கல்லூரிகளை போன்று மருத்துவ கல்லூரிகளும் மாணவர்களை தேடி அலைவார்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு ஒரு கடை மடை உரிமைப் பெற்ற மாநிலம். காவிரி தீர்ப்பு ஒரு ஏட்டுச் சுரைக்காயாக, காணல் நீராக, மாய மானாக இருக்கின்ற காரணத்தினால் கர்நாடகாவிடம் கையேந்தும் ஒரு அவல நிலையை தமிழ்நாட்டிற்கு உருவாகி விட்டது. காவிரி தீர்ப்பு முறையாக பெறப்படாத காரணத்தினால் தான் மேகதாது பிரச்சனையும் எழுந்துள்ளது. காவேரி பிரச்சனை தொடர்பாக கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகின்றனர். ஆனால் தமிழக அரசுக்கு இது போன்ற சிந்தனையே இல்லை எனறும் தேர்தலை முன்னிறுத்தி திமுக அரசு செயல்படுகிறது என்றும் கூறினார்.
மேலும், தேவையற்ற இலவசங்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு காவேரி,வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றிருந்தால் 7 மாவட்டங்கள் வறட்சியை சந்தித்து இருக்காது. எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் ஏற்றுமதி வரியை மத்திய அரசு விதித்துள்ளது. இது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் என்றும் ஜனவரி 21ஆம் தேதி தடையை மீறி தமிழக முழுவதும் கள் இறக்கும் போராட்டம் நடைபெறும் என்றார்.
இதையும் படிங்க: சென்னை தினம்: அரசு பள்ளி மாணவர்களின் "அக்கம்-பக்கம்" புகைப்பட கண்காட்சி முதல்வர் திறப்பு!