சென்னை: பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்கக் கடந்த மூன்று தினங்களாக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜன.10) சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் தொகுப்பை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வரக்கூடிய நிலையில், புதுக்கோட்டை நகர்ப் பகுதிக்குட்பட்ட காமராஜபுரம் 10ஆம் வீதியில் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தமிழக அரசின் ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் தொகுப்பைத் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
அப்போது, இந்த விழாவில் அமைச்சர் ரகுபதி பேசுகையில், "திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையின் அடிப்படையில், குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் தொகுப்பைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து வழங்கியுள்ளார்.
திராவிட மாடல் கொள்கையை ஏற்காதவர்கள் ஆட்சிக்கு எதிரானவர்கள். திராவிட மாடல் ஆட்சி என்பது ஏழை பணக்காரர்கள் என்ற வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் தேவையானதைத் தமிழக அரசு செய்து வருகிறது. மேடு பள்ளங்களைப் பார்க்காமல் பள்ளத்தில் உள்ளவர்களை மேட்டில் கொண்டு செல்லக்கூடிய ஆட்சி நடைபெற்று வருகிறது" என்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "தமிழ்நாடு அரசுதான் துணைவேந்தர் தேர்ந்தெடுக்கும் குழுவை நியமிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு மதிப்பு கொடுத்து ஆளுநர் அறிவித்துள்ளார். இது தமிழ்நாடு அரசு எடுத்து இருக்கின்ற நிலைப்பாட்டிற்குக் கிடைத்திருக்கக் கூடிய வெற்றி என்று கூறி ஆளுநருடன் சண்டையிடத் தயாராக இல்லை. துணைவேந்தர் தேர்வுக் குழுவைத் தமிழக அரசு நியமிக்கலாம் என்ற ஆளுநரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா செய்தது, சொந்த காரணம் என்று கூறியுள்ளார் அவர் எதற்காக ராஜினாமா செய்தார் என்று சென்னை சென்றால் தான் தெரியும் என கூறினார்.
மேலும், பொங்கல் பரிசு வழங்கும் விழாவில், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, புதுக்கோட்டைச் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்ல பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் மாடு முட்டி முதியவர் பலி; தொடரும் அவலம்.. மாநகராட்சியின் பதில் என்ன?