புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், ''உச்ச நீதிமன்றம் ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் தண்டனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. தீர்ப்பின் நகல் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்து விட்டது. நாடாளுமன்றச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்றத் தலைவருக்கும் இந்த தீர்ப்பு கிடைத்திருக்கும். எனவே, நடந்து கொண்டுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ராகுல் காந்தி கண்டிப்பாக பங்கேற்பார்.
உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பில் மறைமுகமாக ராகுல் காந்தியைப் பழி வாங்கும் நோக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அண்ணாமலை தலைமையில் தற்போது நடந்து கொண்டிருப்பது பாதயாத்திரை அல்ல. அது ஒரு கார் யாத்திரை. ஒவ்வொரு தொகுதிகளையும் அந்த தொகுதி எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களை திட்டுகின்ற வேலையைத் தான் அண்ணாமலை செய்கிறார். திட்டும் யாத்திரையாகவே இது உள்ளது.
இதனால் எந்த விதமான தாக்கமும் ஏற்படாது. இது ஒரு தோல்வி யாத்திரை. அண்ணாமலை அரசியல் கற்றுக் கொள்ளவில்லை. இனியாவது அரசியல் கற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் நடந்து செல்லும்போது கூட்டம் கூடவில்லை. கூடுகின்ற கூட்டத்தையும் காசு கொடுத்து கூட்டி வருகின்றனர். அதிமுகவில் இருந்து பலத்த எதிர்ப்பு வந்தவுடன், அண்ணாமலை அதிமுக குறித்த விமர்சனங்களை சமீபத்தில் தவிர்த்து வருகிறார். அதிமுக பாஜக கூட்டணி பொருந்தாத கூட்டணி.
என்எல்சி விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள், விவசாயிகள் மற்றும் என்எல்சி நிர்வாகத்திற்கு எந்த விதமான பாதகமும் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையைத் தீர்வு காண வேண்டும். என்எல்சியும் இந்திய அளவில் மிக முக்கியமானது. விவசாயிகளும் முக்கியமானவர்கள். டெல்லியில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவரை மாற்றுவதற்கு எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.
மாநிலத் தலைவர் மாற்றம் குறித்து தலைமை தான் முடிவு செய்து அறிவிக்கும். அமித்ஷா ஹிந்தி மொழியை திணிக்கும் முயற்சியில் கருத்து கூறுகிறீர்களா இது கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் கருத்தை கண்டனத்தை வரவேற்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: கலைஞர் 5ஆம் ஆண்டு நினைவு தினம்: கோவையில் 6 அடி சிலையுடன் அமைதிப் பேரணி!!