புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தனியார் மண்டபத்தில், காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு தாமாக முன்வந்து நிலம் வழங்கிய உரிமையாளர்களை நேரில் அழைத்து அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டி தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், "புதுக்கோட்டை மாவட்ட மக்களின் 100 ஆண்டுகால கனவுத் திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தின் முதல்கட்ட பணிகளை மேற்கொள்ள ரூ. 700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்துக்கான நிலம் சம்மந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் சுமுகமான முறையில் ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம், புதுக்கோட்டை மாவட்டத்தில் 17,000 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். இற்காக, தாமாக முன்வந்து நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், ஆட்சியர் கையொப்பமிட்ட பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தை நிறைவேற்றும் வகையில் டிசம்பர் 21ஆம் தேதி ரூ. 331 கோடி மதிப்பீட்டில் கால்வாய் வெட்டும் பணிக்காக டெண்டர் பணி தொடங்க உள்ளது.
இந்த திட்டத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு இரண்டு வாரத்தில் மூன்று மடங்கு கூடுதல் இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இழப்பீட்டுத் தொகையுடன் 25 விழுக்காடு ஊக்கத்தொகையும் வழங்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல தலைமுறையினரும் பயன்பெறும் வகையில் நிறைவேற்றப்பட உள்ள காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு தாமாக முன்வந்து நிலம் வழங்கிய உரிமையாளர்களின் பெயர்கள் வராலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்" என தெரிவித்தார்.